ஹனோய், அக்டோபர்-3 – தென் வியட்நாமில் உள்ள 2 மிருகக்காட்சி சாலைகளில் H5N1 எனப்படும் பறவை சளிக்காய்ச்சல் பரவியதில், 47 புலிகள் பரிதாபமாக மடிந்துள்ளன.
ஒரு தனியார் விலங்குகள் பூங்கா மற்றும் Hoh Chi Minh நகருக்கு அருகேயுள்ள மிருகக்காட்சி சாலையில் ஆகஸ்ட் – செப்டம்பருக்கு இடைபட்ட காலத்தில் அவை மடிந்துபோனதாக வியட்நாமிய செய்தி நிறுவனம் (VNA) கூறியது.
புலிகள் தவிர்த்து, 3 சிங்கங்கள், 1 சிறுத்தை ஆகியவையும் H5N1 கிருமியால் மாண்டன.
எனினும், சளிக்காய்ச்சல் ஏற்பட்ட மிருகங்களைக் கையாண்ட பணியாளர்கள், அவற்றுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாமல், சற்று தள்ளியே இருந்ததாக VNA தனது செய்தியில் கூறியது.
ஆனால், சம்பந்தப்பட்ட மிருகக்காட்சி சாலை நிர்வாகங்கள் அது குறித்து கருத்துரைக்க மறுத்து விட்டன.
கடந்தாண்டு இறுதி வரைக்குமான தகவலின் படி வியட்நாமில் மொத்தமாக 385 புலிகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருப்பதாக, வனவிலங்கு பாதுகாப்புக்குப் போராடும் அரசு சாரா இயக்கமான Eucation for Nature Vietnam கூறியுள்ளது.
அவற்றில் 310 புலிகள் தனியாருக்குச் சொந்தமான தோட்டங்களிலும் மிருகக்காட்சி சாலைகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன;
மற்றவை அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் உள்ளன.
இந்த H5N1 கிருமியால், 20 ஆண்டுகளுக்கு முன் தாய்லாந்தில் உள்ள உலகின் மிகப் பெரிய இனவிருத்தி தோட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட புலிகள் மடிந்தன அல்லது அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.