கோலாலம்பூர், டிசம்பர்-31, தேசியப் போலீஸ் படைத் தலைவருக்கு எதிராக அவதூறு பரப்பும் கருத்துகளை நீக்குமாறு, Papagomo என பரவலாக அறியப்படும் பிரபல இணைய வலைப்பதிவாளர் Wan Muhammad Azri Wan Deris உத்தரவிடப்பட்டுள்ளார்.
IGP தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் (Razarudin Husain) செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அந்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்தது.
அவ்வுத்தரவு 21 நாட்களுக்கு செல்லுபடியாகுமென வழக்கறிஞர் எஸ்.ராம் குமார் கூறினார்.
இரு தரப்புக்கும் இடையிலான செவிமெடுப்புக்கு ஜனவரி 10-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் போது, இந்த இடைக்காலத் தடையுத்தரவை நீட்டிக்க வேண்டுமா இல்லையா என்பது முடிவாகும்.
You Tube மற்றும் Tik Tok-கில் Papagomo பதிவேற்றியிருந்த வீடியோ தொடர்பில், IGP கடந்த வாரம் அந்த இடைக்காலத் தடையுத்தரவுக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
அவ்வீடியோவில் தாம் சிறுமைப்படுத்தப்படும் வகையிலும் பிரதமருடன் தொடர்புப்படுத்தியும் சித்தரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
Papagomo இனியும் அந்த அவதூறு கருத்துகளைப் பரப்ப தடை விதிப்பதோடு, இழப்பீடும் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்;
தவிர, பதிவேற்றப்பட்ட அனைத்து சமூக ஊடகங்களிலிருந்தும் அவதூறு வீடியோக்களை நீக்கி, Papagomo மன்னிப்புக் கேட்க வேண்டுமென, தான் ஸ்ரீ ரசாருடன் கோரியுள்ளார்.