
செப்பாங் – ஆகஸ்ட்-29 – நேற்று KLIA 2 விமான நிலையத்தில் ஏற்பட்ட தற்காலிக மின் தடைக்கு, கேபிள் இணைப்பு தொடர்பான ஒரு மின் கசிவே காரணம் என, MAHB எனப்படும் மலேசிய விமான நிலைய நிறுவனம் கூறியுள்ளது.
எனினும், தொழில்நுட்பக் குழு விரைந்து செயல்பட்டு, மாற்று துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரத்தை திருப்பி 28 நிமிடங்களுக்குள் நிலைமையை வெற்றிகரமாக மீட்டெடுத்தது.
இச்சம்பவத்தின் போது விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை; துணை ஜெனரேட்டர்கள் உட்பட அத்தியாவசிய மின் அமைப்புகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன, இதனால் பயணப் பெட்டிகளைக் கையாளுதல், check-in முகப்புகள் மற்றும் விமானத் தகவல் காட்சிகள் போன்ற அனைத்து முக்கியமான அமைப்புகளும் தடையின்றி செயல்படுவதை உறுதிச் செய்ய முடிந்ததாக MAHB கூறியது.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்த அறிக்கை விரைவிலேயே போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிடம் அனுப்பப்படுமென அது அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட மின்வெட்டு ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்தோணி லோக் முன்னதாக ஏமாற்றம் தெரிவித்திருந்தார்; நாட்டின் நற்பெயருக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமென்றார் அவர்.
பொதுப் போக்குவரத்துத் துறையில், 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் எந்தவொரு தொழில்நுட்ப இடையூறும், குறிப்பாக நாட்டின் முக்கிய நுழைவாயிலில் ஏற்பட்டால், அது ஒரு பெரிய இடையூறாக வகைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.