
கோத்தா பாரு, பிப்ரவரி-25 – சுடும் ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட 7 குற்றங்களுக்காக சுற்றுலா முகவர் நிறுவனமொன்றின் நிர்வாகிக்கு, பதினான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 6 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
38 வயது Hafizul Hawari அனைத்து 7 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, கிளந்தான், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
குற்றத்தின் கடுமையைக் கருதி அத்தண்டனையை விதிப்பதாக, தீர்ப்பின் போது நீதிபதி அறிவித்தார்.
எனினும், ஏழு குற்றங்களுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்ட சிறைத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதால், Hafizul மொத்தமாக 6 ஆண்டுகள் மட்டுமே சிறைவாசம் அனுபவிப்பார்.
அந்த 7 குற்றங்களையும் கடந்தாண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி கோத்தா பாருவில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில், ஒரு காருக்குள் புரிந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
Hafizul, சிலாங்கூர் செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேலுமிரு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு KLIA 1 முனையத்தின் மூன்றாவது மாடியில் தனது மனைவியை சுட்டுக் கொல்ல முயன்றதாக, ஏப்ரல் 25-ஆம் தேதி அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
அதே நாள், அதே அதே நேரம், அதே இடத்தில், தனது மனைவியின் மெய்க்காவலரை சுடும் ஆயுதத்தால் காயப்படுத்தியதாக மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.