
புத்ராஜெயா, செப்டம்பர்-10 – உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகாரம் மற்றும் சீன கிராமங்கள் துறைகளுக்கான பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் வூ கா லியோங் (Woo Kah Leong), உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் மொஹமட் அலியை இன்று புத்ராஜெயாவில் மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்.
அதன் போது, நாட்டு மக்களின் நலன்கள் தொடர்பான பல்வேறு கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக வணிகர்களும் பொது மக்களும் சமமாகப் பயனடையுமாறு அமைச்சின் கொள்கைகள் அமைய வேண்டும் என்பதோடு, மக்கள் மையமான அணுகுமுறை மிக அவசியம் என்பதையும் அவர் அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
அதில் LPG சிலிண்டர் பற்றிய அண்மைய பிரச்சனை, ரஹ்மா விற்பனை திட்டம் ஆகியவையும் அடங்கும்.
மேலும், Shopee, Lazada போன்ற இ-வணிக தளங்களில் அனைத்து தயாரிப்புகளுக்கும் மலாய் மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தேசிய மொழியை மதிக்க வேண்டிய அவசியம் இருப்பதுடன், இக்கொள்கை வணிகர்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருப்பதை, DAP இளைஞர் பிரிவுத் தலைவருமான அவர் எடுத்துரைத்தார்.
இப்போதைக்கு அந்த நடைமுறையை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் அமைச்சர் அர்மிசான் அதன் போது கூறினார்.