Latestமலேசியா

KTM இரயிலுக்குள் கம்பியின் மேலேறி படுத்துக் கொண்டு சிறுவன் அட்டகாசம்; வைரலாகும் வீடியோ

கோலாலாம்பூர், ஜூலை-18- கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஓடும் KTM இரயிலுக்குள் ஒரு சிறுவன் ஆபத்தான முறையில் உலோகக் கம்பத்தில் ஏறி படுத்துக் கொண்டிருப்பதைக் காட்டும் டிக் டோக் வீடியோ வைரலாகி வருகிறது.

யாரும் அவனை மேற்பார்வையிடவில்லை என்பது இன்னும் கவலையை ஏற்படுத்தியது. @liyaa04 என்ற டிக் டோக் பயனர் பதிவேற்றிய வீடியோவில், அச்சிறுவன் தனது முழு உடலையும் பயணிகள் கைப்பிடி கம்பினில் சமநிலைப்படுத்துவதைக் காண முடிகிறது.

அந்த கம்பி, பொதுவாக, நின்றுகொண்டிருக்கும் பயணிகள் பிடித்துக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்; ஆனால், வரக்கூடிய ஆபத்தை உணராமல் அவன் தயக்கமின்றிக் காணப்பட்டான்.

வீடியோவைப் பதிவேற்றியப் பெண் ஜூலை 17-ஆம் தேதி இரவு சுங்கை பட்டாணியில் இருந்து பட்டர்வொர்த் வரையிலான KTM பயணத்தின் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

உடன் பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையில், சிறுவன் இரயில் வண்டியின் உள்ளே குறுக்கே முன்னும் பின்னுமாக வேகமாக ஓடினான்.

வீடியோவை எடுத்தப் பெண் நெருங்கி அச்சிறுவனிடம் அப்படி செய்யக் கூடாது என்றுக் கூறியும் அவன் கேட்பதாக இல்லை; சிறுவனின் அருகில் அமர்ந்திருந்த அவனது தந்தை என நம்பப்படும் ஆடவரிடம் சொல்லிப்பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை.

இரயில், ஒரு நிலையத்தில் நின்ற போது, கம்பின் மேலே படுத்துக் கொண்டே, கதவின் இடையிலே கையை விட்டு எடுப்பதுமாக விளையாடியவன், ஒரு கட்டத்தில் அவசர பட்டனையும் அழுத்தச் சென்றான்.

இப்படியே இரவு 10 மணி வரையிலான பயணம் நெடுகிலும் அச்சிறுவன் ‘விளையாட்டுத்தனமாக’ நடந்துகொண்டது, நல்ல வேளையாக ஆபத்தில் முடியவில்லை; என்றாலும், அதற்கு எதிர்மாறாக நடந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதே வீடியோவைப் பதிவேற்றிய பெண்ணின் கவலையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!