
ஷா அலாம், அக் 25 – குளுவாங் வேல் முருகன் ஆலயம் மற்றும் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் இன்று காலையில் ஷா அலாம் ஹைக்கோம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு கந்தர் சஷ்டி புத்தகம் வழங்கப்பட்டது. ஹைக்கோம் தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குளுவாங் வேல் முருகன் ஆலயத்தின் இளைஞர் குழுவின் தலைவர் பாலகணேஸ் பொன்னையா, மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், ஹைக்கோம் தமிழ்ப் பள்ளியின் தலைமையாசிரியை யோகநாயகி , ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விரைவில் தொடங்கவிருக்கும் கந்தர் சஷ்டியை முன்னிட்டு மாணவர்கள் கந்தர் சஷ்யை பாராயணம் செய்து கொள்தற்கு வசதியாக இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் 150 மாணவர்களுக்கு டாக்டர் என்.எஸ் ராஜேந்திரன் கந்தர் சஷ்டி புத்தகங்களை வழங்கினார். தமிழ் மொழியிலும் ஆங்கிலத்திலும் பிரசுரிக்கப்பட்ட இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என என்.எஸ் ராஜேந்திரன் தெரிவித்தார். கந்தர் சஷ்டியை முன்னிட்டு மொத்தம் 4,000 புத்தகங்கள் பிரிசுரிக்கப்பட்டதோடு குளுவாங் வட்டாரத்திலுள்ள முருகன் ஆலயங்களுக்கும் அவை வழங்கப்பட்டன. இதுதவிர நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளி மாணவர்களும் பயனடைய வேண்டும் என்பதற்காக முதல் கட்டமாக ஹைக்கோம் தமிழ்ப் பள்ளிக்கு இந்த புத்தகங்கள் வழங்கப்படுவது மகிழ்ச்சியை அளிப்பதாக மலேசிய இந்து மாமன்றத்தின் துணைத்தலைர் ரிஷகுமார் வடிவேலு தெரிவித்தார். அடுத்தடுத்து இதர தமிழ்ப்பள்ளிகளுக்கும் நாட்டிலுள்ள முருகன் ஆலயங்களுக்கும் இந்த புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.