Latestஉலகம்

Lewotobi Laki-laki எரிமலை வெடிப்பு; 16,000 பேரை இடமாற்ற இந்தோனேசியா மும்முரம்

ஜாகார்த்தா, நவம்பர்-5 – Gunung Lewotobi Laki-laki எரிமலை வெடித்துள்ளதை அடுத்து, அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் 16,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற இந்தோனேசியா அரசாங்கம் முயன்று வருகிறது.

Wilayah Nusa Tenggara Timur பிரதேசத்தில் உள்ள Flores தீவில் அமைந்துள்ள இந்த எரிமலை சனிக்கிழமை இரவு வெடித்துச் சிதறியது.

அதில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

எரிமலையில் தொடர்ந்து சிறு சிறு வெடிப்புகள் ஏற்பட்ட வண்ணமிருப்பதால், மேலும் உயிரிழப்புகளைத் தவிர்க்க, அந்த 16,000 பேரையும் அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டரசு முடிவு செய்துள்ளது.

ஆனால், எரிமலையிலிருந்து வெளியேறி வரும் சாம்பல்களால் மக்களை இடமாற்றம் செய்யும் பணிகள் சுணக்கமடைந்துள்ளன.

இன்று காலை வரையில், அந்த 16,086 பேரில் 2,472 பேர் மட்டுமே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எரிமலை குழம்பு இருக்குமிடத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்ற கிராமங்களிலும், பள்ளிக் கட்டடங்களிலும் அவர்கள் தற்காலிக நிவாரணம் பெற்றுள்ளனர்.

நிலைமை பாதுகாப்பாக இருப்பதாக உத்தரவாதம் கிடைக்கும் வரை, தற்காலிகமாக அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதே நல்லது என அதிகாரிகள் கூறினர்.

எரிமலை வெடித்த பிரதேசத்தில் 58 நாட்களுக்கு அவசர காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!