
கோலாலம்பூர், நவம்பர்-4 – RapidKL இரயில் தீப்பற்றியதாகக் கூறப்படுவதை தேசிய வசதிக் கட்டமைப்பு நிறுவனமான Prasarana மறுத்துள்ளது.
அப்படி எந்தவொரு தீ விபத்தும் ஏற்படவில்லை; எனவே அம்பாங் LRT வழித்தடத்தில் தீ ஏற்பட்டதாகக் கூறி வைரலாக்கப்பட்டுள்ள வீடியோ போலியானது என அது தெளிவுப்படுத்தியது.
அனைத்து இரயில் சேவைகளும் எந்த இடையூறுமின்றி வழக்கம் போலவே செயல்படுவது உள்விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற வதந்திகள், பொது மக்கள் மத்தியில் வீண் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தலாம்; நாட்டின் பொது போக்குவரத்து முறையின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, இதனை தமது தரப்புக் கடுமையாகக் கருதுவதாக Prasarana கூறியது.
பொய்ச்செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என அது எச்சரித்தது.
முன்னதாக அம்பாங் LRT வழித்தடத்தில் இரயிலொன்று தீப்பற்றி எரிவது போன்ற வீடியோ டிக் டோக்கில் வைரலாகி பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது; எனினும் அசல் வீடியோ தற்போது நீக்கப்பட்டு விட்டது.



