கோலாலம்பூர், ஜனவரி-21 – பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான Maxis-சின் முன்னாள் பணியாளர் ஒருவரின் நியாயமற்ற பணி நீக்கத்திற்காக, அவருக்கு இழப்பீடு வழங்க தொழில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tung Yoke Leng எனும் அவ்வாடவரை நீக்கியதில் நிறுவனம் நல்லெண்ணத்துடன் செயல்படவில்லை;
எனவே 1 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக அவருக்கு வழங்க வேண்டுமென, தொழில் நீதிமன்றத் தலைவர் எஸ்.வனிதாமணி தீர்ப்பளித்தார்.
நிலுவைச் சம்பளத் தொகையாக 416,640 ரிங்கிட், மீண்டும் பணியில் அமர்த்துவதற்குப் பதிலான இழப்பீடாக 620,000 ரிங்கிட்டும் அவற்றிலடங்கும்.
1996-ஆம் ஆண்டு Maxis Broadband Sdn Bhd நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த Tung, தனது பணியின் போது நிறுவனத்தில் பல பணிகளைக் கையாண்டுள்ளார்.
முன் அறிவு அல்லது அனுபவம் இல்லாத போதிலும், வேலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தணிக்கைத் துறைக்கு இரண்டு ஆண்டுகள் அவர் பணியமர்த்தப்பட்டார்.
ஆனால், அவருக்கு போதுமான மற்றும் திறமையான துணை ஊழியர்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், மூன்று மதிப்பாய்வுகளில் எதிர்பார்த்த தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, 2021 ஜூனில், PIP எனப்படும் செயல்திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவர் வைக்கப்பட்டார்.
அம்மூன்று மதிப்பாய்வுகளின் முடிவில் ஒரு எச்சரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது; இருப்பினும், நான்காவது மதிப்பாய்வில், அவர் அனைத்து PIP இலக்குகளையும் அடைந்ததாக நிறுவனம் கண்டறிந்தது.
இருந்த போதிலும் 2021 செப்டம்பரில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
மாதம் 24,800 ரிங்கிட் சம்பளம் பெறும் Tung-யை எப்படியாவது வேலையிலிருந்து நிறுத்தி விடும் நோக்கில், மிகக் கடுமையான PIP இலக்குகளை நிர்ணயித்து நிறுவனம் அவருக்கு அநீதி இழைத்திருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.