
கோலாலாம்பூர், செப்டம்பர்-10 – ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிலவரப்படி, 3 இணையச் சேவை மற்றும் சமூக ஊடக சேவை வழங்குநர்களுக்கு, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யின் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
டிக் டோக், டெலிகிராம், வீச்சேட் (WeChat) ஆகியவையே அம்மூன்று நிறுவனங்களாகும் என, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ பாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் போன்றவற்றை நிர்வகிக்கும் Meta நிறுவனம், யு டியூப்பை நிர்வகிக்கும் கூகுள் ஆகியவற்றுடன் புத்ராஜெயா தொடர்ந்து பேசி வருவதாக அவர் சொன்னார்.
இது பாதுகாப்பான மற்றும் பொறுப்பான இணையச் சூழலை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும் என, மேலவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஃபாஹ்மி பதிலளித்தார்.
முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட X தளமோ, இந்த நாட்டில் அந்த உரிமம் பெறத் தேவையான 8 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கவில்லை எனக் கூறி விட்டதாக, ஃபாஹ்மி சொன்னார்.
எனினும், X தளத்தின் பயனர்கள் எண்ணிக்கை குறித்து MCMC புதிய ஆய்வை மேற்கொண்டு வருகிறது; அதனடிப்படையில், X தளத்திற்கும் உரிமம் தேவையா இல்லையா என்பது முடிவாகும் என்றார் அவர்.