புத்ரா ஜெயா , டிச 20 – 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸின் MH 370 விமானத்தை தேடுவதற்கான புதிய பணியை பிரிட்டனின் Ocean Infinity முன்மொழிந்த ஆலோசனையை அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் புதிய பகுதியில் காணமால்போன அந்த விமானத்தை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ பூக் ( Loke Siew Fook ) தெரிவித்தார்.
அந்த விமானத்தின் பாகங்களை கண்டுப்பிடித்த பின்னரே அதற்கான கட்டணத்தை அரசாங்கம் வழங்கும். நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்ட தரவுகள் மற்றும் அண்மைய தகவல்களின் அடிப்படையில் தேடுதல் பகுதியை Ocean Infinity முன்மொழிந்துள்ளது.
அந்த நிறுவனத்துடனான உடன்பாட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து போக்குவரத்து அமைச்சு பேச்சு நடத்தி வருகிறது என அந்தோனி லோக் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
MH370 விமானத்தின் ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உறவினர்களுக்கு பதில் அளிப்பதற்காக தேடுதல் நடவடிக்கையை தொடரும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முடிவு நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
MH370 காணாமல் போனது விமானப் போக்குவரத்தில் இன்னமும் மிகப்பெரிய மர்மமாக உள்ளது. பணியாளர்கள் மற்றும் பயணிகள் என 239 பேருடன் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்றபோது அந்த விமானம் காணாமல்போனது .