
கோலாலம்பூர், மார்ச்-8 – மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370-மைத் மீண்டும் தேடும் பணிகளுக்கு, அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் உதவிக் கரம் நீட்டியுள்ளன.
தேடல் பணிகளுக்குப் பொறுப்பேற்றுள்ள பிரிட்டனின் Ocean Infinity நிறுவனத்துக்கு, அவ்விரு நாடுகளின் போக்குவரத்து பாதுகாப்பு தரப்புகள் தொழில்நுட்ப உதவியை வழங்க முன்வந்துள்ளன.
MH370 விமானம் காணாமல் போய் இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில், போக்குவரத்து அமைச்சு அதனை உறுதிப்படுத்தியது.
உலக வான் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகவும் சிக்கலான சவாலான தேடலாக இது விளங்குகிறது.
எனவே தேடல் பணியில் அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் விலைமதிப்பற்றவை என அமைச்சு வருணித்தது.
MH370 விமானத்தின் இறுதி ஓய்வு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நியாயமான பதில்களை வழங்குவதற்கும் நம்பிக்கைக்குரிய ஒவ்வொரு வழியையும் நாங்கள் பின்பற்றுவோம் என அவ்வறிக்கை மேலும் கூறியது.
MH370 விமானத்தைத் தேடும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு Ocean Infinity நிறுவனத்துக்கு அனுமதி வழங்குவதாக, கடந்த டிசம்பரில் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தினார்.
என்றாலும் No Find No Fee அதாவது கண்டுபிடிக்கவில்லை என்றால் கட்டணம் கிடையாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் Ocean Infinity-க்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து தேடும் பணி, இந்துப் பெருங்கடலில் அண்மையில் மீண்டும் தொடங்கியது.
அந்த போயிங் 777 விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், Ocean Infinity நிறுவனத்துக்கு மலேசிய அரசாங்கம் 390.98 மில்லியன் ரிங்கிட்டை கட்டணமாக வழங்க வேண்டும்.