கோலாலம்பூர், ஜனவரி 17 – ஏய்மஸ்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் இந்திய மாணவர்களுக்கும் நிதிச்சுமையை எதிர்நோக்குகின்ற மாணவர்களுக்கும், கல்வி வளர்ச்சிக்காக MIED Care உபகாரச் சம்பள வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
கல்வி வழி சமுதாயத்தை உயர்த்தும் ம.இ.கா தேசியத் தலைவரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக் வேந்தருமான டான் ஶ்ரீ SA விக்கினேஸ்வரன் அவர்களின் தூர நோக்கு திட்டத்திற்கு ஏற்ப தற்போது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மட்டுமே 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த உபகாரச் சம்பளத்தை பெற்று வருகின்றனர்.
முன்பிலிருந்தே இந்த உபகார சம்பளம் வழங்கப்பட்டு வந்தாலும், டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் அவர்கள் தலைமைப் பொறுப்பிற்கு வந்த பின்னர், 50 முதல் 60 மாணவர்கள் வரை பெற்று வந்த இந்த உபகாரச் சம்பள வாய்ப்பு, தற்போது 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது டான் ஶ்ரீ அவர்களின் சமுதாயம் குறிப்பாக இளையோர் மீதான அக்கறையை காட்டுகிறது என்றே அர்த்தமாகும்.
நல்ல கல்வித் தகுதியும் உயர் மதிப்பெண்களும் பெற்ற மாணவர்களுக்கு நிதி சுமையைக் குறைத்து, அவர்களின் விருப்பமான துறையில் மேற்கல்வியை முடிக்க வழிவகை செய்யும் முயற்சியான இத்திட்டத்தில் பல மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடமும் MIED Care உபகாரச் சம்பள வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு, இன்று ஏய்மஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
19 பட்டப்படிப்புகளுக்கான 722 மாணவர்கள் இந்த MIED Care உபகாரச் சம்பளத் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர்.
தேர்வு நடைமுறைகள் முறையாகவும் நேர்த்தியாகவும், ஒவ்வொரு மாணவர்களின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு, குடும்ப நிதி நிலை மற்றும் கல்வித் தகுதியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
விருப்பமான துறையில் சிறந்த கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதோடு மட்டுமல்லாமல், தங்களின் குடும்ப நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் உபகாரச் சம்பளம் வழங்கும் வாய்ப்பு குறித்தும் மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
சமூகத்தின் எந்த நிலை மக்களாக இருந்தாலும், கல்வி வழி மேம்பாட்டிற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், MIED Care உபகாரச் சம்பளத் திட்டம் மூலம், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயர்கல்வி கனவை நிஜமாக்கி வருகிறது.
“சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை” என்பதற்கேற்ப, ஏய்மஸ்ட் பல்கலைக்கழகம், டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமைய்துவத்தின் கீழ் மாணவர்களின் கல்வி பயணத்தில் உறுதுணையாக செயல்படுவதோடு, கல்வி முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள பொருளாதார சவால்களை வெற்றி கொள்ள உதவுகிறது என்றால் மிகையாகாது.