
கோலாலம்பூர், பிப்ரவரி-18 – தமிழ்ப்பாள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டு வருவது சமூகத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புதியக் கல்வியாண்டில் நாட்டிலுள்ள தமிழ்ப் பள்ளிகளில் இதுவரை 11,021 மாணவர்கள் முதலாமாண்டில் நுழைந்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 547 மாணவர்கள் குறைந்துள்ளனர்.
இவ்வாண்டு ஆக அதிகமாக சிலாங்கூரில் 3,574 மாணவர்களும், ஜோகூரில் 2,013 பேரும், பேராக்கில் 1,615 மாணவர்களும் பதிந்துக் கொண்டுள்ளனர்.
நெகிரி செம்பிலானில் 1,038 மாணவர்களும், கெடாவில் 923 மாணவர்களும், பினாங்கில் 824 பேரும், கோலாலம்பூரில் 523 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
பஹாங்கில் 285 பேர், மலாக்காவில் 217 பேர் சேர்ந்துள்ள வேளை, ஆகக் குறைவாக பெர்லிஸ் மாநிலத்தில் 8 மாணவர்களும் கிளந்தானில் ஒருவரும் முதலாமாண்டில் நுழைந்துள்ளனர்.
2023-ல் 11,712-டாக இருந்த முதலாமாண்டு மாணவர் எண்ணிக்கை கடந்தாண்டு 11,568-டாகக் குறைந்தது.
இவ்வாண்டு மேலும் 547 மாணவர்கள் குறைவாகப் பதிந்துக் கொண்டுள்ளனர்.
இந்த தொடர் சரிவுக்கு நமது பிறப்பு விகிதம் குறைந்து வருவதே முக்கியக் காரணமாக இருப்பதாக, மலேசியத் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் கூறினார்.
அதோடு, இந்தியர்கள் வாழும் பகுதிகளில் தமிழ்ப் பள்ளிகள் இல்லாதது, சில பெற்றோர்களுக்கு சீனப் பள்ளி, தேசியப் பள்ளி, அனைத்துலகப் பள்ளிகளின் மீதுள்ள மோகம், மற்றப் பள்ளிகளைக் காட்டிலும் ஒரு சில தமிழ்ப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதும் அதற்கு காரணங்களாக உள்ளன என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் நிலைக்க வேண்டுமென்றால் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப் பள்ளிக்கு அனுப்ப வேண்டுமென்று பாண்டியன் கேட்டுக் கொண்டார்.