
கோலாலம்பூர், பிப் 3- உண்மையாக தகுதி பெற்றவர்களுக்கு மான்ய உதவித் தொகை விநியோகிக்கப்பட வேண்டும் என்பதோடு அனைவருக்குமான பொருளாதார சுபிட்சத்திற்கு மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim) அழைப்பு விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டுமின்றி அனைத்து குடிமக்களும் சுபிட்சம் அடைவதற்கு நடப்பு பொருளாதாரத்தின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என இன்று 15ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தை தொடக்கிவைத்து அரச உரை ஆற்றியபோது அவர் இதனை வலியுறுத்தினார்.
உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதில் நமது பொருளாதாரம் முன்னேற்றம் கண்டிருப்பது குறித்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதோடு வேலையில்லா விதிதமும் தொடர்ந்து குறைவாக உள்ளது.
கடந்த ஆண்டு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பல்வேறு துறைகளில் 5.9 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததோடு , முதல் ஒன்பது மாதங்களில் மொத்த வர்த்தகம் இரண்டு டிரில்லியன் (Trillion) ரிங்கிட்டைத் தாண்டியது.
இந்த குறிப்பிடத்தக்க பொருளாதார செயல்திறனுக்காக நான் பிரதமரையும் அரசாங்கத்தையும் பாராட்டுகிறேன். மேலும் அது தொடர்ந்து மேம்படும் என்று நம்புகிறேன்.
இருந்தபோதிலும் , இந்த வெற்றியானது குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மட்டும் பயனளிக்காமல், அனைத்து குடிமக்களும் சுபிட்சமாக மாறுவதற்கு அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று பேரரசர் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கத்தின் நிதி நிலையை வலுப்படுத்தியுள்ள இலக்கு மானிய அணுகுமுறையை வரவேற்பதாகவும், உண்மையிலேயே தகுதியுடையவர்களுக்கு மானியங்கள் திறமையாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.