
கோலாலாம்பூர், ஜூலை-25- கடந்த 15-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் ஹராப்பான் அல்லது பெரிக்காத்தான் நேஷனல் என எந்தவொரு கூட்டணியையும் ஆதரிப்பதில்லை என்ற தேசிய முன்னணியின் முடிவு இன்னமும் நீடிக்கிறது.
எனவே, அடுத்தப் பொதுத் தேர்தலை தேசிய முன்னணி தனியாகச் சந்திக்காது என, அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறியிருப்பதை ம.இ.கா நிராகரிப்பதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். ஆனந்தன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாரிசான் வழங்கி வரும் ஆதரவு உண்மையில் தற்காலிகமானதே என்றார் அவர்.
2022 பொதுத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக் கிடைக்காததால், அப்போதைய மாமன்னரின் அறிவுரையின் படி ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டு, அதில் தேசிய முன்னணி பங்கேற்று வருகிறது; அவ்வளவுதான்.
எனவே, ‘No PH, No PN’ என்ற முடிவில் இதுவரை மாற்றமில்லை; 16-ஆவது பொதுத் தேர்தல் ஒத்துழைப்புப் பற்றி தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்திலும் இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை என இன்று வெளியிட்ட அறிக்கையில் ஆனந்தன் சொன்னார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்காக, தேசிய முன்னணி ஒற்றுமை அரசாங்கக் கட்சிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை மேற்கொண்டு வருமென, துணைப் பிரதமருமான சாஹிட் முன்னதாகக் கூறியிருந்தார்.
எனினும், அது குறித்து கருத்துரைத்த ஆனந்தன், சாஹிட்டின் அப்பேச்சு, தேசிய முன்னணியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றார்.
ஒருவர் மட்டுமே முடிவெடுக்கும் விஷயமல்ல இது; கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே தேசிய முன்னணியின் முடிவு செல்லுபடியாகுமென, ஆனந்தன் திட்டவட்டமாகக் கூறினார்.