ஈப்போ, டிசம்பர்-23 – ஈப்போவிலிருந்து மெனோரா சுரங்கப் பாதை நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 264.4-வது கிலோ மீட்டரில், ஒரு டாங்கி லாரி மற்றும் 3 கார்களை உட்படுத்திய விபத்தால், நேற்று மாலை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் நெரிசல் ஏற்பட்டது.
மாலை 5.52 மணிக்கு ஏற்பட்ட அச்சம்பவத்தில், டாங்கி லாரி தடம்புரண்டு சாலையின் குறுக்கே போய் நின்றது.
இதனால் வடக்கு நோக்கிச் செல்லும் அனைத்துப் பாதைகளிலும் போக்குவரத்துத் தடைப்பட்டது.
வாகனங்கள் கிட்டத்தட்ட நகரவேயில்லை என, PLUS நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ X தளமான @plustrafik -கில் தெரிவித்தது.
விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இரவு மணி 7.20 வரை நீடித்ததால், சுமார் 6.5 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நிலைக்குத்தியதாக PLUS கூறியது.
இரவு 7.35 மணி வாக்கில் அப்பணிகள் முழுமைப் பெற்றதும் அனைத்துப் பாதைகளும் மீண்டும் திறக்கப்பட்டன.
எனினும் இரவு 9 மணி வாரையிலும் போக்குவரத்து சற்று மந்தமாகவே இருந்துள்ளது.
46 வயது டாங்கி லாரி ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
அவ்விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அபாங் சை’னால் அபிடின் அபாங் அஹ்மாட் (Abang Zainal Abidin Abang Ahmad) கூறினார்.