Latestமலேசியா

PN-க்கு அனுப்பிய கடிதம் விண்ணப்பம் அல்ல; உறுப்பியம் குறித்த விளக்கம் கோருதலே – ம.இ.கா விளக்கம்

கோலாலம்பூர், டிசம்பர்-1 – PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு அனுப்பியக் கடிதம், அதில் உறுப்புக் கட்சியாக சேருவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அல்ல என, ம.இ.கா தெளிவுப்படுத்தியுள்ளது.

மாறாக, அந்தக் கடிதம் PN-ன் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் நோக்கத்துடனேயே அனுப்பப்பட்டது.

“எந்த மாதிரியான உறுப்பியம்? சேர்க்கை நடைமுறை, உறுப்புக் கட்சியாக சேர்த்துகொள்ளப்பட்டால் ம.இ.காவின் நிலை போன்ற அம்சங்களுக்கு விளக்கம் மட்டுமே கேட்டுள்ளோம்” என ம.இ.கா பொதுச் செயலாளர் டத்தோ எஸ். ஆனந்தன் அறிக்கையொன்றில் கூறினார்.

பெரிக்காத்தானில் இணைய ம.இ.கா விண்ணப்பத்திருப்பதாக, PN தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் முன்னதாக கூறியிருந்த நிலையில், ம.இ.கா இவ்விளக்கத்தை அளித்துள்ளது.

பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ம.இ.காவைச் சந்திக்க அழைத்ததோடு, பெரிக்காத்தானில் இணைய அழைப்பு விடுத்ததை அடுத்து, விளக்கம் கோரி அக்கடிதம் அனுப்பப்பட்டது.

“ஒருவேளை ம.இ.கா பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது நேரடியாக அமையுமா அல்லது குறிப்பிட்ட நிபந்தனைகள் ஏதும் வைக்கப்படுமா என்பது குறித்தும் நாங்கள் தெளிவுப் பெற வேண்டியுள்ளது”

தவிர, இந்தியச் சமூகத்தின் கல்வி, சமூக-பொருளாதாரம், மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் குறித்து PN-ன் கடப்பாட்டையும் ம.இ.கா கேட்டுள்ளது.

இப்படி எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்த பிறகே இறுதி முடிவெடுக்க ஏதுவாக இருக்கும் என ஆனந்தன் கூறினார்.

கடந்த மாத ம.இ.கா பொதுப் பேரவையில் BN-ல் தொடர்வதா அல்லது புதிய கூட்டணியில் சேர்வதா என்ற முடிவு ஒத்திவைக்கப்பட்டது.

இறுதி முடிவை எடுக்க, தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் ம.இ.கா மத்திய செயலவைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!