
புத்ராஜெயா, மார்ச்-17 – PTPTN எனப்படும் தேசிய உயர் கல்வி நிதிக் கழகத்தின் கடன் பாக்கியை வசூலிக்க, வெளிநாட்டுப் பயணத் தடையை மட்டுமே அரசாங்கம் பரிசீலிக்கவில்லை.
மாறாக மாற்று வழிகளும் ஆராயப்படுவதாக, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சம்ரி அப்துல் காடிர் தெரிவித்துள்ளார்.
பயணத் தடையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை;
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு முன், கடன் பாக்கி வசூல் குறைந்துள்ளதற்கான காரணங்களை மதிப்பிட ஒரு விரிவான அணுகுமுறையை அமைச்சு ஆராயுமென்றார் அவர்.
PTPTN கடனாளிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையை மீண்டும் அமுல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு Dr சம்ரி பதிலளித்தார்.
உயர் கல்வி துணையமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முத், PTPTN கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கடந்த வாரம் கூறியிருந்தார்.
அத்தடை 7 ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஜனவரி மாதம் வரைக்குமான நிலவரப்படி, அட்டவணைப்படி கடன் தவணைப் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியக் கடனாளிகளுக்கு, 2.1 மில்லியன் நினைவூட்டல் அறிவிப்புகளை PTPTN வெளியிட்டுள்ளது.