
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24 – பிரபல இதய – மார்பு அறுவை சிகிச்சை நிபுணரும், மலாயாப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான Dr K. சிவகுமார், RCSEd எனப்படும் எடின்பர்க் அரச அறுவை சிகிச்சைக் கல்லூரியின் அறுவை சிகிச்சைப் பயிற்சியாளர் புலத்தின் Fellowship பெற்ற முதல் மலேசியராக பெயர் பதித்துள்ளார்.
Fellowship என்பது பல்கலைக்கழக கல்வி சார்ந்த ஆராய்ச்சி களுக்காக வழங்கப்படும் உதவி நிதியாகும்.
RCSEd – ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவ அமைப்பு ஆகும்; அங்கு அறுவை சிகிச்சை வல்லுநர்களுக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படுவதோடு, தேர்வும் நடத்தப்படுகிறது.
அறுவை சிகிச்சைத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த RCSEd, வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்வில் Dr சிவகுமாருக்கு அந்த அங்கீகாரத்தை வழங்கியது.
இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களை நாட்டின் வருங்கால சொத்தாக உருவாக்க அவர்களுக்கு பயிற்சியளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள தமக்கு, இந்த Fellowship அங்கீகாரம் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றென அவர் வருணித்தார்.
“வெறும் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தால் என்னால் 10 பேரைக் காப்பாற்ற முடியும்; ஆனால் பயிற்சியாளராக இருப்பதால் 10 பேருக்குப் பயிற்சியளித்து 100 பேரைக் காப்பாற்றும் அளவுக்கு அவர்களை உருவாக்க முடியும்” என்றார் அவர்.
மலேசியாவில் இதய – மார்பு அறுவை சிகிச்சைத் துறை உரிய வனத்தைப் பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டில் Cardiothoracic நிபுணர்களை அதிகரித்தால் மேலும் ஏராளமான இதய – நுரையீரல் நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சைகளை வழங்க முடியும் என சிவகுமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தற்போது மலாயாப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் முதல் இதய-மார்பு அறுவை சிகிச்சை பயிற்சியில் முதுகலைப் படிப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு Dr சிவகுமார் பொறுப்பேற்றுள்ளார்.
இவருக்குக் கிடைத்துள்ள இந்த உலகத் தரத்திலான அங்கீகாரம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.