
பத்து பஹாட், ஜூலை 3 – கடந்த மாதம் பத்து பஹாட் தாமான் சீனார் பெர்லியானில் (Taman Sinar Berlian), நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திலிருந்து 110,700 ரிங்கிட் மதிப்பிலான ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும் 700 ரிங்கிட் ரொக்கத்தையும் திருடிய ஆடவனை காவல்துறையினர் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 31 வயதான நபர், வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனத்திலிருந்து பொருட்களைக் கொள்ளையடிக்கப்படுவதை நேரில் பார்த்த பிறகு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக பத்து பஹாட் மாவட்ட காவல்துறைத் தலைவர், ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி (Shahrulanuar Mushaddat Abdullah Sani) தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த அதே நாளன்று பத்து பஹாட் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த (BSJD) காவல் துறையினர்கள் சந்தேக நபரைக் கைது செய்து, திருடப்பட்ட ரோலக்ஸ் கடிகாரத்தையும் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
போலீசார் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், உள்ளூர்வாசியான அந்த 27 வயதுடைய சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த ஆடவனுக்கு குற்றவியல் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் தொடர்பான 14 முந்தைய குற்ற பதிவுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கு தண்டனைச் சட்டம் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றதென்று ஷாருலானுவார் குறிப்பிட்டுள்ளார்.