
ஜோகூர் பாரு, அக்டோபர்-15,
ஜோகூர் பாருவில் சுமார் RM100,000 மதிப்பில் நிறுவனமொன்றின் முழு நிதி ஆதரவில் வரலாற்று சிறப்புமிக்க திருமணமொன்று நடைபெற்றுள்ளது.
அக்டோபர் 10-ஆம் தேதி Ketti Mellam Exhibition & Services நிறுவனம் இவ்விழாவை பெர்மாஸ் விளையாட்டு வளாகத்தின் மோக்ஷா மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்தியது.
மொத்தம் 16 திருமணத் துறை நிபுணர்கள் இணைந்து, ஒரு இளம் ஜோடியின் கனவு திருமணத்தை முழுக்க முழுக்க இலவசமாக நடத்தினர்.
மணமக்கள் சோப்னா அன்பழகன் – ப்ரூசெசோதோமன் (Brusechothoman), தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நிதி ஆதரவாளர்கள் முன்னிலையில் மணமுடித்தனர்.
ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த ப்ரூசெசோதோமனும், தனித்து வாழும் தாயால் வளர்க்கப்பட்ட சொப்னாவும், இத்திருமணம் கனவிலும் நினைத்திராத ஒன்றென மனம் நெகிழ்ந்தனர்.
மணமக்கள், வாழ்க்கையின் சவால்களை வென்ற நம்பிக்கையின் சின்னங்களாக திகழ்கிறார்கள்.
எனவே இத்திருமணம் ஒற்றுமையும் கருணையும் சேர்ந்து எதையும் சாத்தியமாக்க முடியும் என்பதற்கான சான்று என கெட்டி மேளம் நிறுவனர் சரவணா குமார் தெரிவித்தார்.
18 மாதங்கள் நீண்ட திட்டமிடலின் பலனாக உருவான இந்த திருமணம் வெறும் அன்பின் கொண்டாட்டம் மட்டுமல்ல, மலேசியாவில் ஒற்றுமை, தாராள மனப்பான்மை மற்றும் சமூக உணர்வின் சக்தியை எடுத்துக்காட்டும் ஒரு மைல்கல் சாதனையாகும்.
ஜோகூர் பாருவில் திருமண கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதில் பெயர் பெற்ற இந்த கெட்டி மேளம் நிறுவனம், அடுத்து, வளர்ந்து வரும் B40 மாணவர்களை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.