
கோலாலம்பூர், ஜன 22 – லஞ்சம் கேட்டது மற்றும் 110,000 ரிங்கிட் லஞ்சம் வாங்கியது தொடர்பில் சபா மாநில அரசாங்க நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி கைது செய்தது. தாம் பணிபுரியும் துறையுடன் விநியோகத் திட்டங்கள் வழங்கப்பட்ட பல நிறுவனங்களிடம் இருந்து சுமார் 110,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதன் தொடர்பில் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். கோத்தா கினபாலுவிலுள்ள எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் நேற்று நண்பகல் மணி 2.30 அளவில் வாக்குமூலம் வழங்க முன்வந்தபோது அந்த நபர் கைது செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சிக்கு நெருக்கமான தகவல்கள் கூறின.
கடந்த 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனது துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ள அதிகாரிகளுக்காக அந்த சந்தேகப் பேர்வழி லஞ்சம் கேட்டதாக தொடக்கக் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சலவை இயந்திரங்கள், மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், விவேக கைதொலைபேசிகள் , மின்சார கீத்தார், உடற்பயிற்சிக்கான உபகரணங்கள், கார் உபரி பாகங்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் போன்றவற்றை வாங்குவதற்கு அந்த சந்தேகப் பேர்வழி கையூட்டு பெற்றதாக நம்பப்படுகிறது. இதனிடையே அந்த நபர் கைது செய்யப்பட்டதை சபா எம்.ஏ.சி.சி இயக்குநர் டத்தோ S. கருணாநிதி உறுதிப்படுத்தினார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009 ஆண்டு சட்டத்தின் 17 ( a) விதியின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதோடு அனைத்து பொருட்களையும் எம்.ஏ.சி.சி பறிமுதல் செய்துள்ளது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின் அந்த சந்தேகப் பேர்வழி விடுவிக்கப்படுவார் என கருணாநிதி தெரிவித்தார்.