சீனாவில் இராட்சத மீன் தொட்டிக்குள் கடற்கன்னியாக சாகசம் புரிந்த பெண்ணின் தலையைக் கௌவிய பெரிய மீன்

பெய்ஜிங், ஜனவரி-31, தென் சீனாவில் உள்ள வனப் பூங்காவில் ராட்சத மீன் தொட்டிக்குள் கடற்கன்னி போல் வேடமிட்டு சாகசம் புரிந்த பெண்ணை, ஆளுயர மீன் தாக்கும் பயங்கரமான காட்சிகள் வைரலாகியுள்ளன.
ரஷ்யக் கலைஞரான மாஷா என்பவர் கடற்கன்னி போல் உடையணிந்து மீன் தொட்டியில் நீந்துவது வீடியோவில் தெரிகிறது.
தனதருகே மீன்கள் நீந்திக் கொண்டிருக்கையில், கண்ணாடிக் தொட்டிக்கு வெளியிலிருந்து சாகசத்தைக் காணும் குடும்பங்களை நோக்கி அவர் கையசைக்கிறார்.
இந்நிலையில் நீரின் மேற்பரப்பு நோக்கி அவர் நகர்ந்த போது, ஒரு இராட்சத மீன் அவரின் தலைக்கு மேலே தோன்றியது.
கண்ணிக்கும் நேரத்தில் சட்டென மாஷாவின் தலையை, தனது பெரிய தாடைகளுக்கு இடையில் மீன் கௌவ்விக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை சற்றும் எதிர்பாராத வருகையாளர்கள் குறிப்பாக குழந்தைகள் பீதியில் கத்திக் கூச்சலிட்டனர்.
அதில் 22 வயது மாஷாவுக்கு தலை, கழுத்து மற்றும் கண்களில் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், மாஷாவைத் தாக்கிய மீன் எந்த இனத்தைச் சேர்ந்தது என தெரிவிக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட வனப் பூங்கா அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்றாலும், மாஷாவுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ‘தார்மீக இழப்பீடாக’ வெறும் 100 டாலர் வழங்கப்பட்டதாக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்து வலியோடு இருந்த போதும், சீக்கிரமே மீண்டும் தண்ணீருக்குள் இறங்கி சாகசத்தைத் தொடருமாறு தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் மாஷா கூறிக் கொண்டார்.