
கோலாலம்பூர், டிசம்பர் 24 – மடானி அரசின் 285.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு நேரடி பயன்களையும் வழங்கி வருகின்றன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்த முதலீடுகள் 13.2 விழுக்காடு உயர்வை பதிவு செய்துள்ளன. இதன் மூலம் தரமான வேலைவாய்ப்புகள் உருவாகி, மக்களின் வருமானமும் வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று அவர் கூறினார்.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையமான MIDA-வின் தகவலின்படி, உற்பத்தி, சேவை மற்றும் முதன்மைத் துறைகளில் 4,874 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் 152,766 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடுகள் 47.5 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், ஜோகூர் மாநிலம் அதிக முதலீடுகளை பெற்றுள்ளது. சிங்கப்பூர், சீனா மற்றும் அமெரிக்கா முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



