
கோலாலம்பூர், ஜனவரி-27-மலேசிய ரிங்கிட், 8 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது.
நேற்றைய பரிவர்த்தனையின் முடிவில் ரிங்கிட் ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக RM3.96 என்ற விலையில் மூடப்பட்டது.
இது 2018 மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிக வலுவான நிலையாகும்.
ஒரு வழியாக RM4.00 என்ற ‘உளவியல்’ தடையை உடைத்து, இவ்வாரம் ஆசியாவின் சிறந்த நாணயமாக ரிங்கிட் உயர்ந்துள்ளது.
மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா தனது கொள்கையை நிலைத்திருக்கச் செய்தது, வலுவான ஏற்றுமதி, மற்றும் பலவீனமான அமெரிக்க டாலர் ஆகியவை ரிங்கிட்டின் இந்த உயர்வுக்கு காரணம் என, பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பேங்க் நெகாரா கடந்த வாரம் தான் OPR வட்டி விகிதத்தை 2.75 விழுக்காட்டில் நிலைநிறுத்தியது.
இதுவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மலேசியர்களுக்கு, வலுவான ரிங்கிட் என்பது இறக்குமதி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பயணச் செலவுகளை குறைக்கும்.
ஆனால் ஏற்றுமதியாளர்கள் குறைந்த இலாபத்தையே சந்திக்கலாம்.
எது இப்படி இருந்தாலும், உலக வட்டி விகித மாற்றங்கள் இவ்வாண்டு பிற்பகுதியில் ரிங்கிட்டின் இந்த வலிமையை சோதிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போதைக்கு RM3.96 என்ற விலையில் மூடிய ரிங்கிட், 2018-க்குப் பிறகு மலேசியாவின் நம்பிக்கையை மீண்டும் உயர்த்தியுள்ளது.



