Latestமலேசியா

SOSMA கீழ் 16 வயது பெண் பிள்ளை கைது: விவரங்களை சரிபார்ப்பதாக உள்துறை அமைச்சர் உறுதி

கோலாலம்பூர், ஜனவரி-23-கெடா, ஜித்ராவில் SOSMA எனப்படும் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 16 வயது பெண் பிள்ளை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாகனத்தில் இருந்தபோது அவர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தனது மகள் அவ்வாகனத்தில் ஒரு பயணியாக மட்டுமே இருந்தார், எந்த குற்றத்திலும் அவருக்குத் தொடர்பில்லை என அப்பெண்ணின் தாய் கூறுகிறார்.

இந்நிலையில், SOSMA சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட மகள் வாந்தி எடுத்தும், தோலில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அத்தாய், மகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதே வாகனத்தில் இருந்த அப்பிள்ளையின் தந்தையும் இதர சிலரும் கைதானபோது, அப்பெண் கைதானார்.

அவருக்குக் குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை; ஆனால் அவரின் தந்தை இதற்கு முன் சிறைவாசம் அனுபவித்தவர் ஆவார்.

குழந்தைகளையும் பதின்ம வயதினரையும் உட்படுத்திய வழக்குகள், 2017ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழே விசாரிக்கப்பட வேண்டும் என்பதால், அப்பெண்ணை உடனடியாக விடுதலை செய்யுமாறு மனித உரிமை அமைப்பான SUARAM எனப்படும் மலேசிய மக்கள் குரல் வலியுறுத்தியுள்ளது.

அதோடு, கைதான 24 மணி நேரங்களில் சிறார் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்ற விதிமுறையையும் போலீஸார் பின்பற்ற வேண்டுமென SUARAM வலியுறுத்தியது.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில்,

இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை முதலில் சரிபார்த்து உறுதிச் செய்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

சந்தேக நபர்களை, விசாரணையின்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்க SOSMA-வில் இடம் இருப்பதால் அச்சட்டம் சர்ச்சையாகியுள்ளது.

எனினும் அச்சட்டத்தின் குறிப்பிட்ட சில விதிகளை அரசாங்கம் மறுஆய்வு செய்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!