
புத்ரா ஜெயா, ஏப்ரல் 24- 2024ஆம் ஆண்டின் SPM தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில், நாடு முழுவதும் பெரும்பான்மையான மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினைப் பெற்றுள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில் 2024இன் முடிவுகள் உச்சத்தைத் தொட்டு விட்டது என்று கல்வி இயக்குநர் டத்தோ அஸ்மான் அட்னான் கூறியுள்ளார்.
அந்த வகையில் இந்த வருட எஸ்.பி.எம் தேர்விலும் பெரும்பான்மையான நமது இந்திய மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் வெற்றியை கொண்டாட வணக்கம் மலேசியா ஒரு போதும் தவறியதில்லை. அதே போல இந்த ஆண்டும் SPM தேர்வில் சிறந்த தேர்ச்சியினைப் பெற்ற மாணவர்கள் அவர்களின் மன மகிழ்வை நம்மோடு பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
2024இல் அனைத்துப் பாடங்களிலும் A-க்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 14,179ஆக அதிகரித்துள்ளது. இது சென்ற ஆண்டை காட்டிலும் 3.7 சதவீதம் அதிகமாகும்.
அதே நேரத்தில் 2023இல் 83,112 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் க்ரெடிட் (credit) எடுத்த நிலையில் 2024இல் அந்த எண்ணிக்கை 86,040 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, தொடர்ந்து வணக்கம் மலேசியா, சிறந்த தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்ளும் அதே வேளையில் சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனந்தளராமல் தொடர்ந்து முயல வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.