
கோலாலம்பூர், ஜனவரி 18 – பத்துமலை திருத்தலத்தில் நாளை 2025ஆம் ஆண்டிற்கான தேசிய ஒற்றுமை பொங்கல் திருவிழா கோலாகலமாக களை கட்டவிருக்கிறது.
கலாச்சார மையத்தின் திறப்பு விழாவோடு துவங்கவுள்ள நாளை நிகழ்வில், பத்துமலை பக்தி மலை என்னும் பத்துமலை வரலாற்றைக் கூறும் புத்தகமும் வெளியீடு காணவுள்ளதாக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய அளவிலான பொங்கல் திருவிழா பிற்பகலில் ஆரம்பமாகும் என்றும் அவர் கூறினார்.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானமும், மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவும் இணைத்து நடத்தும் இவ்விழாவில், பொங்கல் வைத்தல், ஆடல்-பாடல், பாரம்பரிய நிகழ்ச்சிகள், மற்றும் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு அங்கங்கள் இடம்பெறவுள்ளன.
இவ்விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு டான் ஸ்ரீ ஆர். நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.