
கோலாலம்பூர், அக்டோபர் 21 – இந்தியச் சமூகம் ஓரங்கட்டப்படவில்லை என்பதை பட்ஜட் 2025 நிரூபிக்கிறது என்று தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
இந்தியச் சமூகத்திற்கான வணிக நிதியுதவி உட்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த 130 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு, இதற்கு சான்றாக அமைவதாக அவர் தெரிவித்தார்.
பட்ஜட்டில் 100 மில்லியன் ரிங்கிட் மித்ராவிற்கும், 30 மில்லியன் ரிங்கிட் இந்தியச் சமூக தொழில்முனைவர்களின் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மட்டுமே பிரதமர் இந்தியர்களுக்காக வழங்கியுள்ளதாகச் பலரும் சிந்திக்கின்றனர்.
ஆனால், பள்ளிகளுக்கு என பொதுவாக அறிவிக்கப்பட்ட நிதியாக இருக்கட்டும், சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியாக இருக்கட்டும்; அவை அனைத்துமே இந்தியர்களை உள்ளடக்கியதே என்று டத்தோ ஸ்ரீ ரமணன் இவ்வாறு விவரித்தார்.
இனம் வாரியாகப் பிரித்துக் கூறாமல், மலேசியர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைத்தே பட்ஜட்டில் நிதி இலகிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
எனவே, இந்தியச் சமுதாயம் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படுகின்றது என்ற கூற்றை விடுத்து, அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள திட்டங்களைப் பயன்படுத்துமாறு, இன்று இந்திய தொழில் முனைவருக்குக் பிரிவ்-ஐ திட்டக் காசோலைகளை வழங்கிய பிறகு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, பிரிவ்-ஐ திட்டத்தின் வாயிலாக 4 மாதங்களில் 33.17 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதை அவர் அறிவித்தார்.
இந்தியத் தொழில் முனைவர்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த பிரிவ்-ஐ திட்டத்தில், இதுவரை 384 தொழில் முனைவர்கள் நன்மை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தெக்குன், பிரிவ்-ஐ போன்ற திட்டங்கள், இந்தியத் தொழில் முனைவர்கள் தங்களது துறையில் மேலும் வளரச்சியடைய ஊக்குவிப்பாக அமைவதாக, இன்று இந்தியத் தொழில் முனைவர்களுக்குக் காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் தலைமையேற்ற போது டத்தோ ஸ்ரீ ரமணன் விவரித்தார்.