
கோலாலம்பூர், ஜூலை 25 – கடந்த திங்களன்று ஜகார்த்தாவில், ஆசியான் 23 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப்பின் போது ஜாலுர் ஜெமிலாங் அவமதிக்கப்பட்ட சர்ச்சை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மலேசிய கால்பந்து சங்கம் (FAM), ஆசிய கால்பந்து கூட்டமைப்புகளைத் (AFC & AFF) தொடர்பு கொண்டுள்ளது.
இந்த சம்பவத்தை தான் தீவிரமாகக் கருதுவதாகவும், தேசிய அணி பங்குபெற்ற இந்தப் போட்டியில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பதற்கு தன்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக FAM தலைவர் டத்தோ முகமது ஜோஹாரி முகமது அயூப் கூறியுள்ளார்.
சமீபத்தில், போட்டியின் போது இந்தோனேசிய ரசிகர்கள் ஜாலுர் ஜெமிலாங்கில் ‘X’ என்ற குறிப்பை வரைந்து தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது
முதலில், மலேசியா பிலிப்பைன்ஸிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து பின்னர் புருனேயை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. இருப்பினும், அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகவிருக்கும் சமயத்தில் இந்தோனேசியாவை தோற்கடிக்கத் தவறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மலேசியாவை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) 2027 ஆம் ஆண்டு வரை வரை இடைநீக்கம் செய்துள்ளது என்று அவதூறாகப் பேசிய இந்தோனேசிய கால்பந்து பார்வையாளர் மீதும் நடவடிக்கையைப் பற்றி ஜோஹரி FAM வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுவதாக அறியப்படுகின்றது.
கடந்த மாதம் புக்கிட் ஜாலீல் தேசிய மைதானத்தில் நடந்த 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மூன்றாவது சுற்று தகுதிச் சுற்றில் வியட்நாமை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி மலேசியா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஹரிமாவ் மலாயா தற்போது குழு F இல் ஆறு புள்ளிகளுடன் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து வியட்நாம், லாவோஸ் மற்றும் நேபாளம் எந்த புள்ளிகளும் இல்லாமல் உள்ளன.