சிங்கப்பூரில் பொதுத் தேர்தல்; உலகம் முழுவதுமிருந்து வாக்களிக்கும் சிங்கப்பூரியர்கள்

சிங்கப்பூர், மே-3 – சிங்கப்பூரின் 14-ஆவது பொதுத் தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அக்குடியரசு முழுவதும் 1,240 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன; இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு முடிவுறும்.
தகுதிப் பெற்ற 2.75 மில்லியன் வாக்காளர்கள் இம்முறை தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
வாக்களிப்பது சிங்கப்பூரில் கட்டாயமாகும்.
எனவே, உள்ளூரில் வாக்களிப்புப் போக, 10 வெளிநாட்டு நகரங்களிலும் இதே காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டிருக்கும்.
துபாய், லண்டன், வாஷிங்டன், நியூ யோர்க், சான் ஃபிரான்சிஸ்கோ,
கேன்பரா, தோக்யோ, ஜப்பான், பெய்ஜிங், ஹோங் கோங், ஷங் ஹாய் ஆகிய அந்நகரங்களிலிருந்து சிங்கப்பூரியர்கள் வாக்களிக்கின்றனர்.
ஆளுங்கட்சியான PAP வேட்புமனுத் தாக்கலன்றே 5 தொகுதிகளைப் போட்டியின்றி வெற்றிக் கொண்டதால், எஞ்சிய 92 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மிகப் பெரிய எதிர்க்கட்சியாக கருதப்படும் தொழிலாளர் கட்சி 26 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆக PAP கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்ட நிலையில் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் மீது மக்கள் எவ்வளவு ஈர்ப்பு கொண்டுள்ளார்கள் என்பதை மட்டுமே இத்தேர்தல் எதிரொலிக்கும்.
மொத்தம் 11 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைகளும் போட்டியிடுகின்றன.
லீ சியென் லூங்கிடமிருந்து கடந்தாண்டு மே மாதம் பிரதமர் பதவி கைமாறியப் பிறகு, லாரன்ஸ் வோங் சந்திக்கப் போகும் முதல் தேர்தல் இதுவாகும்.
எனவே, தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 52 வயது லாரன்ஸ் உள்ளார்.
பொருளாதார சவால்களுக்கு மத்தியில் லாரன்ஸ் வோங்கிற்கு சிங்கப்பூரியர்கள் அமோக வெற்றியை அள்ளித் தருவார்களா அல்லது எதிர்கட்சிகளுக்கு கணிசமான தொகுதிகளைக் கொடுப்பார்களா என்பது இன்று பின்னேரத்திற்குள் தெரிந்து விடும்.