
சிங்கப்பூர், டிசம்பர்-13, சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான 18 வயது டி.குகேஷ் வாகை சூடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் மிக இளம் வயதில் உலக வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதுவும் நடப்பு வெற்றியாளரான சீனாவின் டிங் லிரெனை (Ding Liren) குகேஷ் வீழ்த்தியிருப்பது பெருமையாகக் கருதப்படுகிறது.
13 சுற்றுகளுக்குப் பிறகு இருவரும் 6.5 புள்ளிகளோடு சமமாக இருந்த நிலையில், இறுதிச் சுற்றில் 58-வது காய் நகர்த்தலின் போது குகேஷ், டிங் லிரெனை வீழ்த்தி அரங்கை அதிர வைத்தார்.
இதன் வழி 7.5-க்கு 6.5 என்ற புள்ளி வித்தியாசத்தில், சென்னையைச் சேர்ந்த குகேஷ் பட்டம் வென்றார்.
ரஷ்யாவின் சதுரங்க ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் (Garry Kasparov) 22 வயதில் உலகப் பட்டம் வென்றதே இதுவரை சாதனையாக இருந்தது.
உலக சதுரங்க வெற்றியாளரான இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 5 முறை உலக வெற்றியாளர் பட்டத்தை வென்றிருந்தார்.
குகேஷுக்கு பரிசு தொகையாக 1.35 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது.
7 வயதிலிருந்து சதுரங்கம் விளையாடி வரும் தனக்கு, இது வாழ்வின் மிகச் சிறந்த தருணம் என குகேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
குகேஷுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.