
மலாக்கா, பிப்ரவரி-1 – MAHB சம்பந்தப்பட்ட, ஊழியர் சேமநிதி வாரியத்தின் பங்கு பரிவர்த்தனைகளில் 500 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நாடாளுமன்ற பொதுக் கணக்குத் தணிக்கைக் குழுவான PAC முக்கியப் புள்ளிகளை அழைக்கக்கூடும்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கும் அவர்களில் அடங்குவார்.
PAC தலைவரும் மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் அதனை உறுதிபடுத்தினார்.
அந்தோனி லோக்கும், மற்றவர்களும் பிப்ரவரி இரண்டாவது வாரம் தொடங்கி கட்டம் கட்டமாக விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
MAHB ஏற்கனவே விசாரணைக்கு அழைக்கப்பட்டு விட்டதாக எர்மியாத்தி சொன்னார்.
MAHB-யின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2023 ஜனவரியில் ஒரு யூனிட்டுக்கு 6 ரிங்கிட் 74 சென் விலையில் MAHB பங்குகளை EPF விற்றது;
பின்னர், அதே பங்குகளை ஒரு யூனிட்டுக்கு 11 ரிங்கிட் விலையில் மீண்டும் வாங்கியது குறித்து EPF தெளிவுப்படுத்தியாக வேண்டுமென, பல அரசு சாரா அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
EPF-க்கு MAHB-யில் வெறும் 5 சதவீத பங்குகள் மட்டுமே எஞ்சியிருக்கும் அளவுக்கு நடைபெற்ற அந்த பங்கு விற்பனையை விசாரிக்குமாறு, MCA-வும் அரசாங்கத்தை வற்புறுத்தியுள்ளது.