
கோலாலம்பூர், டிசம்பர் 18-இந்து மதத்தை பின்பற்றும் மாணவர்களுக்கு, நன்னெறிக் கல்வி பாடத்தில் சனாதன தர்மத்தின் மதிப்புகள் இணைக்கப்பட வேண்டும் என, செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர். அருணாச்சலம் பரிந்துரைத்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் மத்தியில் பகடிவதை பிரச்னைகளைக் களையும் நீண்டகால தடுப்பு நடவடிக்கையாக இது அமையும் என்றார் அவர்.
மேலவையில், 2025 பகடிவதை தடுப்புச் சட்ட மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.
இந்த மசோதா பகடிவதைச் சம்பவங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைப்பதையும் உறுதிச் செய்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், நற்பண்புகள் மற்றும் நெறி ஒழுக்கங்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அதுவும் வகுப்பறையிலேயே இது தொடங்க வேண்டும்.
இந்தப் பரிந்துரை, அகிம்சை, தர்மம், சத்தியம், சேவை போன்ற உலகளாவிய மதிப்புகளை நன்னெறிக் கல்வியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தும் மலேசிய இந்து சங்கத்தின் கோரிக்கையுடன் ஒத்துப்போவதாகவும் லிங்கேஷ்வரன் சொன்னார்.
நன்னெறிக் கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்யும் பாடமாக இல்லாமல், மாணவர்களின் மனசாட்சியையும் ஒழுக்கத்தையும் வடிவமைக்கும் பாடமாக இருக்க வேண்டும்.
அதே நேரத்தில், பௌத்தம், கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட பிற மதங்களை பின்பற்றும் மாணவர்களுக்கும் அவரவர் மத போதனைகளை நன்னெறிக் கல்வியில் இணைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, கல்வி அமைச்சும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.



