
புக்கிட் ஜாலில், டிசம்பர்-28 – மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகர் விஜயின் ‘தளபதி திருவிழா’ நிகழ்வால் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கமே நேற்றிரவு குலுங்கியது.
இரவு 7 மணிக்கு மேல் தான் நிகழ்ச்சி என்றாலும், காலை முதலே அரங்க வளாகத்தில் இரசிகர்கள் திரளத் தொடங்கினர்; இதனால் புக்கிட் ஜாலிலே திருவிழா கோலம் பூண்டது.
விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்ற நிலையில், மலேசியாவில் மிகப்பெரிய தமிழ் பட இசை வெளியீட்டு விழா என்ற மலேசிய சாதனைப் புத்தகத்தின் அங்கீகாரத்தையும் இது பெற்றது.
தமிழகத்திலிருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள், நடிகர்கள் வந்திருந்தனர்.
பிற்பகல் 3 மணி தொடக்கம் இசை நிகழ்ச்சி களைக் கட்டியது.
விஜயின் ஆரம்ப கால படங்களின் பாடல்கள் முதல் இப்பொழுது வரை உள்ள பாடல்கள் அதில் பாடப்பட்டன.
இரவு 7.30 மணிக்கு இசை வெளியீட்டு விழா தொடங்க, இசையமைப்பாளர் அனிருத்தின் சிறப்புப் படைப்பும் இடம்பெற்றது.
விஜயுடன் பணியாற்றிய நடன மாஸ்டர்கள் இணைந்து அவருக்கு tribute வழங்கும் வகையில் நடனமாடினர்.
உச்சக்கட்டமாக மேடையில் பேசிய விஜய், 33 வருட தனது திரையுலக வாழ்க்கையில் மக்கள் தனக்குப் பேராதரவு வழங்கியதாகவும், இனி மக்களுக்குத் திருப்பித் தரும் நேரம் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
முடிவில், ஒரு பாடலைப் பாடியதுடன் பாட்டுக்கும் விஜய் நடனமாட, அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.
The last dance என அவரின் திவிர இரசிகர்கள் அதனைக் கொண்டாடித் தீர்த்தனர்.
இவ்வேளையில், போலீஸாரின் எச்சரிக்கையும் மீறி அரங்கில் விஜயின் கட்சியான TVK கொடியை பறக்க விட்டதற்காக இரசிகர் ஒருவர் கைதான வீடியோவும் வைரலானது.
இதனிடையே, இந்த தளபதி திருவிழாவோடு, Colours of India ஏற்பாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு பிரமாண்ட உணவுத் திருவிழாவும் நடைபெற்றது.
அதில் 200-க்கும் மேற்பட்ட உணவு விற்பனையாளர்கள் பலவித உணவுகளையும் பானங்களையும் விற்றனர்.
‘தளபதி திருவிழா’, ‘ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா’, ‘உணவுத் திருவிழா’ என முப்பெரும் விழாவாக நடைபெற்ற இந்நிகழ்வு, விஜய் ரசிகர்களுக்கு நீங்கா நினைவுகளை தந்துள்ளது என்றால் மிகையில்லை.



