
கோலாலம்பூர், ஏப்ரல்-28, போலீஸ் அதிகாரிகள் பணியில் இருக்கும்போது உடலில் அணிய வேண்டிய கேமராக்களை அணியவோ அல்லது செயல்படுத்தவோ தவறினால் அவர்கள் மீது கட்டொழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.
நாடு முழுவதும் போலீஸ்காரர்களின் பயன்பாட்டுக்காக கொடுக்கப்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள், போலீஸ் படையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை என, புக்கிட் அமான் தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பத் துறை இயக்குநர் சஹாபுடின் அப்துல் மனான் கூறினார்.
கேமரா பதிவுகளை நீதிமன்றத்தில் ஆதாரமாகவும் பயன்படுத்தலாம் என்றார் அவர்.
இச்சாதனங்களை வழங்குவதில் ரோந்து மற்றும் போக்குவரத்து அமலாக்க பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
அடுத்தாண்டு கூடுதலாக 10,000 உடல் கேமராக்களுக்கு விண்ணப்பிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் சஹாபுடின் கூறினார்.
குடிநுழைவுத் துறையின் நெறிமுறை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அதன் அதிகாரிகளுக்கு சுமார் 600 உடல் கேமராக்கள் வழங்கப்படுமென, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் கடந்த வாரம் கூறியிருந்தார்.
நாடு தழுவிய அளவில் இவ்வாண்டு 157 மாவட்ட போலீஸ் தலைமையகங்கள் மற்றும் 640 போலீஸ் நிலையங்களில் 7,000 க்கும் மேற்பட்ட கேமராக்கள் தருவிக்கப்பட்டன.
தனது அதிகாரிகள் உடல் கேமராக்களைப் பயன்படுத்தியன் விளைவாக 2023 ஆகஸ்ட் 1 முதல் 2024 ஜூலை 31 வரை தவறான நடத்தை, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் 38.5% குறைந்துள்ளதாக, கடந்த அக்டோபரில் சுங்கத் துறை கூறியிருந்தது.