
அலோஸ்டார், ஜன 20 – லங்காவிக்கு அருகிலுள்ள Bukit Malut கப்பல் துறைமுகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பயணிகளை ஏற்றிச் செல்லும் மூன்று feriகள் அழிந்தன.
நேற்றிரவு மணி 9.46க்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு 23 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக லங்காவி தீயணைப்பு நிலைய அதிகாரி Mohd Zamri Abd Ghani தெரிவித்தார்.
ஆறு feriகள் சம்பந்தப்பட்ட இந்த தீவிபத்தில் இரண்டு பெர்ரிகள் சுமார் 80 விழுக்காடு அழிந்ததோடு சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.
மற்றொரு படகு சுமார் ஐந்து விழுக்காடு எரிந்த வேளையில் இதர மூன்று படகுகள் தீ பரவுவதிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் Mohd Zamri விவரித்தார்.
தீயில் எரிந்த feri கடலில் அடித்துச் செல்லப்பட்டபோதிலும் மீனவர்களின் உதவியோடு கரைக்கு இழுத்து வரப்பட்டது.
மற்றொரு feriயில் பின்புற வழியாக கடல் நீர் புகுந்ததால் தீ அணையும் வரை தீயணைப்பு வீரர்கள் காத்திருந்தனர்.
நேற்றிரவு மணி 11.07 அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்ட போதிலும் அதிகாலை மணி 2.10 அளவில் தீயணைப்பு நடவடிக்கை முழுமையாக முடிவுற்றது.



