
கோலாலம்பூர், டிசம்பர் 31 – மலேசிய குடிமக்களுக்கான சீன விசா கட்டண தள்ளுபடியை சீனா 2026 அதாவது டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பை மலேசியாவில் உள்ள சீன தூதரகம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஒருமுறை நுழைவு விசாவுக்கான கட்டணம் சாதாரண சேவைக்கு 104 ரிங்கிட் என்றும், எக்ஸ்பிரஸ் சேவைக்கு 246 ரிங்கிட் என்றும் அவசர சேவைக்கு 324 ரிங்கிட் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருமுறை நுழைவுக்கான விசா கட்டணம் சாதாரண சேவைக்கு 119 ரிங்கிட் எனவும், எக்ஸ்பிரஸ் சேவைக்கு 261 ரிங்கிட் எனவும் மற்றும் அவசர சேவைக்கு 339 ரிங்கிட் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பலமுறை நுழைவு விசாவுக்கான கட்டணம் சாதாரண சேவைக்கு 141 ரிங்கிட் என்றும், எக்ஸ்பிரஸ் சேவைக்கு 283 ரிங்கிட் என்றும் மற்றும் அவசர சேவைக்கு 361 ரிங்கிட் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாத பலமுறை நுழைவு விசாவிற்கான கட்டணம், சாதாரண சேவைக்கு 171 ரிங்கிட் என்றும் எக்ஸ்பிரஸ் சேவைக்கு 313 ரிங்கிட் என்றும் மற்றும் அவசர சேவைக்கு 391 ரிங்கிட் என்றும் அறியப்படுகின்றது.
இந்நிலையில் விசா விண்ணப்பங்களுக்கான செயலாக்க காலமாக, சாதாரண சேவைக்கு நான்கு வேலை நாட்கள், எக்ஸ்பிரஸ் சேவைக்கு மூன்று வேலை நாட்கள் மற்றும் அவசர சேவைக்கு இரண்டு வேலை நாட்கள் தேவைப்படும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.



