
கோலாலம்பூர்,ஆகஸ்ட் 11- AMMA எனப்படும் அனைத்து மலேசிய மலையாளி சங்கம் அதன் 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தை அண்மையில் ஷா அலாம் மிகவும் சிறப்பாக நடத்தியது.
இந்த நிகழ்வில் தீபகற்ப மலேசியா முழுவதிலுமிருந்து AMMA அமைப்பின் கீழ் உள்ள அனைத்து இணைப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டதோடு , 50 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்திற்கு தொடர்ந்து சேவையாற்றியதற்காகவும் சங்கத்திற்கும் சமூகத்திற்கும் செய்த சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் AMMAவின் அறங்காவலர்களான எம்.ஆர்.சந்திரன், டான் ஸ்ரீ வி.சி. ஜார்ஜ் மற்றும் ஹாஜி சைட் முகமட்
அம்முட்டி ( Syed Mohamed Ammutty ) ஆகியோருக்கு Fiduciaries Par Excellence’ award விருதை வழங்கி பாராட்டினார்.
AMMA நிறுவப்பட்டதிலிருந்து, அச்சங்கம் கல்வியில் சிறந்து விளங்கவும், நேர்மை மற்றும் குணநலன்களை வளர்க்கவும், தேசத்திற்கு பங்களிக்கத் தயாராக இருக்கும் குடிமக்களை மேம்படுத்தவும் உதவியுள்ளது என்றும், அது மலேசியாவின் உண்மையான சாராம்சம் என்றும் வான் அஸிஸா குறிப்பிட்டார்.
அதோடு இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ, ( Hanna yeoh ) , 11 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை எடுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வில் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி, தெரசா கோக், கிள்ளான் நாடளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் , செனட்டர் டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அம்மாவின் தலைவர் டாக்டர் மனோஹூர் குருப் , அச்சங்கத்தின் புரவலர் டான் ஸ்ரீ ரவீந்திரன் மேனன், ஆகியோரின் உரையும் இடம்பெற்றது.
ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தின்ஸ்ரீ ஷைலா நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா மற்றும் மலேசிய கலைஞர்களின் பாடல்கள் ,தஞ்சை கமலா இந்திரா நடன அகாடமி, பத்மா நிருத்யாலயா கலை, நிருத்தசமுத்திர கலை மற்றும் வெஹாரா கலை நடன ஸ்டுடியோவின் படைப்புகள் மேலும் அழகுச் சேர்த்தன.