பிரதமரை இழிவுப்படுத்தினால் உடனடியாகப் பாயும் சட்டம் சம்ரி வினோத் போன்றோரை உட்படுத்திய சம்பவங்களில் வேகம் காட்டுவதில்லையே; சாய்ட் இப்ராஹிம் விமர்சனம்

கோலாலம்பூர், ஏப்ரல்-20, பிரதமர் இழிவுப்படுத்தப்படும் சம்பவங்களில் வேகம் காட்டும் சட்ட அமுலாக்கம், அதுவே மற்ற விவகாரங்கள் என்றால் சுணக்கமடைந்து விடுகிறது.
சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத்தை உட்படுத்திய சம்பவமே இதற்கு நல்ல உதாரணம் என, சட்டத் துறை முன்னாள் அமைச்சர் டத்தோ சாய்ட் இப்ராஹிம் கூறினார்.
இந்துக்களின் தைப்பூசக் காவடியாட்டத்தை பேயாட்டத்துடனும் மது போதையுடனும் ஒப்பிட்டு பேசிய சம்ரி வினோத் மீது நாடளாவிய நிலையில் 900-க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
அவரின் பொறுப்பற்ற பேச்சு, 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்களை நிந்திக்கும் செயல் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
இருந்தாலும், விசாரணை அறிக்கை தேசிய சட்டத் துறை அலுவலகத்தில் ‘தூங்கிக் கொண்டிருக்கிறது’; அது எப்போது தூசு தட்டி எடுக்கப்படுமென்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சிறுமைப்படுத்தியதாக கிளந்தானில் கைதான ஆடவர் சில நாட்களிலேயே நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்.
இது அப்பட்டமான இரட்டை நிலைப்பாடாகும்.
அரசியல் ரீதியாக எதிர்மறையான விளைவைக் கருத்தில் கொண்டே இவ்வாறு செய்யப்படுகிறது.
“அப்படியானால், உங்களுக்கும், நீங்கள் கடுமையாக விமர்சித்த முந்தைய அரசாங்கங்களுக்கும் என்ன வித்தியாசம்” என சாய்ட் கேள்வி எழுப்பினார்.
மலேசியாவுக்குப் புதிய விடியலை உறுதியளித்த வாக்குறுதி எங்கே போனது என்றார் அவர்