
கோம்பாக், பிப்ரவரி-16 – மலேசிய இந்தியர்கள் பங்குச் சந்தை முதலீட்டில் இன்னமும் பின்தங்கியே உள்ளனர்.
நம்பிக்கை இல்லாதது, வருமானம் வருமா வராதா என்ற தயக்கம், முதலீடு செய்து ஏமாந்து போனது போன்றவை அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன.
இந்நிலையில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா களமிறங்கியுள்ளது.
அவ்வகையில் மலேசியப் பங்குச் சந்தையான Bursa Malaysia-வுடன் இணைந்து முதன் முறையாக பங்கு பரிவர்த்தனை கண்காட்சியை மித்ரா நடத்தியது.
கோம்பாக்கில் நடைபெற்ற அந்நிகழ்வை மித்ரா தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பிரபாகரன் தொடக்கி வைத்தார்.
மிகவும் பின்தங்கியுள்ள இந்தியர்களின் சொத்துடைமையை உயர்த்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும் என்றார் அவர்.
பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்வது, எப்படி கணக்குத் திறப்பது, எப்படி இலாபமீட்டுவது போன்ற அம்சங்கள் அக்கண்காட்சியில் விளக்கப்பட்டன.
மித்ராவின் தலைமைச் இயக்குனர் பிரபாகரன் கணபதியும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார மக்களும் திரளாகப் பங்கேற்று பயனடைந்தனர்.
இதே விழிப்புணர்வுக் கண்காட்சிகள் இவ்வாண்டு 9 மாநிலங்களில் நடைபெறும்;
B40, M40 வர்கத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக ஏராளமான இளைஞர்கள் அவற்றில் பங்கேற்ற மித்ரா இலக்கு வைத்திருப்பதாக பிரபாகரன் கூறினார்.