
கோலாலம்பூர், மார்ச்-30 – மலேசியாவில் இருக்கின்ற இந்து கோயில்கள் தொடர்ந்து பிரச்னைகளை எதிர் நோக்கி வருவது, நம் சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் பெரும் அவப்பெயரையும் சங்கடத்தையும் ஏற்படுத்துகின்றன.
மற்ற சமய வழிபாட்டு தலங்களுக்கு இது போன்ற சிக்கல் இல்லாத நிலையில் இந்து சமய ஆலயங்களுக்கு மட்டும் இத்தகைய பிரச்சனை தொடர்கிறது.
இதையெல்லாம் தீர்க்க வேண்டிய மலேசிய இந்து சங்கம் என்ன செய்கிறது என, ம.இ.கா தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல். சிவ சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மஸ்ஜிட் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய பிரச்சனையை நாடே அறியும்; அதற்கு முன்பு பிரிக்ஃபீட்ஸ்ல் சிவன் ஆலயத்தில் இரண்டு தரப்பினர் நிர்வாக அளவிலும் நிதி அடிப்படையிலும் சண்டையிட்டுக் கொண்டு ஒரு தரப்பார் பக்தர்களை வெளியேற்றிவிட்டு பூட்டுபோட, இன்னொரு தரப்பினர் பூட்டப்பட்டபூட்டை வெட்டிய காட்சிகளை எல்லாம் அரங்கேறின.
சில காலத்திற்கு முன்பு சுங்கை வே ஸ்ரீ ஈஸ்வரி அம்மன் ஆலய நிர்வாகத்தை ROS மூலம் அரசாங்கமே எடுத்துக் கொண்டது; அங்கு நிதி மோசடி நடைபெற்றதாகவும் பேசப்பட்டது.
தொடர்ந்து சுங்கைப் பட்டாணி பத்து டுவா அம்மன் ஆலயத்திலும் இதே சிக்கல் ஏற்பட்டு அரசாங்கம் தலையிட்டு ஆலய நிர்வாகத்தை கைப்பற்றும் அளவுக்கு நிர்வாக தரப்பில் மோதல் ஏற்பட்டது.
இப்படி வரிசையாக நம் ஆலயங்கள் போலீஸ் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் சென்று கோயில் பிரச்சனை சம்பந்தமாக புகார் செய்வதும் வழக்காடுவதுமான நிலைமை தொடர்கிறது.
அருள்மிகு மரத்தாண்டவர் ஆலயப் பிரச்சனை குறித்து நீதிமன்றமே சலிப்படைந்து இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டது.
நீதிபதிகளே தலையிட்டு பரிந்துரை செய்யும் அளவுக்கு ஆண்டாண்டு காலமாக இந்த ஆலய நிர்வாகம் நீதிமன்றத்தையே சுற்றி வலம் வருகிறது.
ம.இ.கா-வின் தேசிய ஊடகப் பிரிவுத் தலைவர் என்பதை விட மலேசிய இந்து சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்ற வகையில் இத்தகைய நிலைமை மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் அளிப்பதாக சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
மலேசிய இந்து சங்கம் ஓரளவுக்காவது விழிப்புடன் இருந்தாலே நம் ஆலயங்கள் இப்படி காலமெல்லாம் பிரச்சனைய எதிர்கொள்வதை தடுக்க முடியும்.
இந்து ஆலயங்களில் இவ்வளவு பிரச்னைப் போய்க் கொண்டிக்கின்றது என்றால், இந்து சங்கத்தின் பலவீனமே காரணம்.
எனவே, சங்கத்தை வழிநடத்த புதிய இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும்; அவர்கள் தலைமையில் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டு சிறப்பாகவும் சீராகவும் செயல்பட்டால் நாட்டில் உள்ள இந்து ஆலயங்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்களுக்கு முறையான தீர்வு காண முடியும் என்று சிவசுப்பிரமணியம் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.