
கோலாலம்பூர், மார்ச்-27- 4,000 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்தியர்களின் கபடியாட்டம் உலக அளவில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
ஏற்கனவே ஆசியப் போட்டி வரை கால்பதித்து, ஜப்பான், தாய்லாந்து, அரபு நாடுகள் வரை கவனம் ஈர்த்துள்ள கபடி, அடுத்து தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டியான சீ போட்டியிலும் வெள்ளோட்டம் காண்கிறது.
இவ்வாண்டு பிற்பகுதியில் நடைபெறவிருக்கும் தாய்லாந்து சீ போட்டியில் தான் கபடி முதன் முறையாக இடம் பெறப் போகிறது.
2002 முதல், ஆசியப் போட்டியிலும், 2004 முதல், உலகக் கபடி போட்டியிலும் பங்கேற்று வரும் KAM எனப்படும் மலேசியக் கடி சங்கம், சீ போட்டி சவாலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.
தாய்லாந்து சீ போட்டி மலேசியக் கபடி குழுவுக்கு நல்லதொரு களமாக அமையுமெனக் கூறிய KAM தலைவர் இ.பத்மநாதன், ஈராண்டுகள் கழித்து கோலாலம்பூரில் நடைபெறும் 2027 சீ போட்டியிலும் கபடி இடம்பெறுமென நம்பிக்கைத் தெரிவித்தார்.
இப்படி அனைத்துலக சவால்களுக்கு பரிச்சயமான மலேசியக் கபடி சங்கத்திற்கு, உள்ளார ஒரு கவலை இருக்கவே செய்கிறது.
அதாவது, மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மாவில் கபடியின் எதிர்காலம் என்னாகும் என்பது தான்…
அடுத்தாண்டு சிலாங்கூர் சுக்மா போட்டியில் கபடி இடம் பெறுமா என்பது இதுவரை உறுதியாகவில்லை என பத்மநாதன் சொன்னார்.
அவ்விவகாரம் குறித்து இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோவுக்கும், சிலாங்கூர் விளையாட்டு மன்றத்திற்கும் கடிதம் எழுதி பதிலுக்குக் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
திறமைகளை வெளிக்கொணரவும், தேசிய அணிக்கான விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் சுக்மா ஒரு சிறந்த தளமாக விளங்க முடியும் என்றார் அவர்.
இந்நிலையில் 2026 சுக்மா போட்டியில் இடம் பெறப்போகும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதிப்பட்டியல் ஹரி ராயா பெருநாளுக்குப் பிறகே வெளியிடப்படவுள்ளது.
எனவே நல்லதே நடக்குமென பெரும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக பத்மநாதன் கூறினார்.
பெரும் போராட்டத்திற்குப் பிறகு கடந்தாண்டு சரவாக் சுக்மா போட்டியில் கபடி சேர்த்துக்கொள்ளப்பட்டது.
அதில் ஆடவர் – மகளிர் இரு பிரிவுகளிலும் கூட்டரசு பிரதேசம் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியது .