
ஷா ஆலாம், ஏப்ரல்-18, மின்னியல் சிகரெட் அல்லது வேப் விற்பனையைத் தடைச் செய்வது குறித்து சிலாங்கூர் அரசாங்கம் ஆராயவிருக்கிறது.
தேசியப் போலீஸ் படையின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை முன் வைத்த பரிந்துரைக்கு ஏற்ப அது அமைவதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எந்தவொரு முடிவும் எடுக்கப்படும் முன், பொது சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் மற்றும் மாநில சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசிக்கப்படும்.
அவ்விவகாரம், கூட்டரசு ஒழுங்குமுறை விதிகளுடன் தொடர்புடையது; தேவைப்பட்டால் அதை அமுல்படுத்துவோம்; ஆனால் அனைவரின் கருத்துகள் பெறப்படுவது முக்கியமென, அமிருடின் கூறினார்.
அண்மையக் காலமாக புதிய செயற்கை போதை மருந்துகளின் தவறான உபயோகத்துடன் தொடர்புப்படுத்தப்படுவதால், வேப் விற்பனையைத் தடைச் செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாமென, நேற்று அயோப் கான் பரிந்துரைத்திருந்தார்.
நாட்டில், இதுவரை, ஜோகூர் மட்டுமே வேப் விற்பனையைத் தடை செய்துள்ளது