
கோலாலம்பூர், ஜனவரி-18-கடுமையான பேச்சுக்கள் தொடர்ந்தாலும், அமெரிக்கா உடனடியாக ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தும் வாய்ப்புக் குறைவே…
இதுவே, புவியியல் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
தினமொரு முறை மிரட்டல் விடுத்து வந்தாலும், தெஹ்ரானில் Ayatollah-வின் கோட்டையை வீழ்த்துவது எளிதல்ல என அதிபர் டோனல்ட் ட்ரம்ப்புக்கு உயர்மட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளனவாம்.
இதனால் தனது தீவிர நிலைப்பாட்டிலிருந்து ட்ரம்ப் சற்றே பின் வாங்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ட்ரம்ப் நினைப்பது போல் ஈரான் பலவீனமான நாடல்ல….
வலுவான அரசியல் அமைப்பு, பாதுகாப்புக் கட்டமைப்பு, உள்ளூர் ஆதரவு மற்றும் வட்டார செல்வாக்குடன் அது விளங்குகிறது.
இப்படியொரு சூழ்நிலையில் ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலும் நீண்டகால போரை உருவாக்கி, உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
தவிர, தாக்குதல் விஷயத்தில் அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கு நாடுகளின் தெளிவான ஆதரவு இல்லாததும் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
என்னதான் ஈரானுடன் அரசியல் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உலக எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை நினைத்து, பல நாடுகள் வெளிப்படையாக இராணுவ நடவடிக்கையை ஆதரிக்கத் தயங்குகின்றன.
இதனால், அமெரிக்கா இராணுவ மோதலுக்கு பதிலாக, தூதரக அழுத்தம், பொருளாதார தடைகள் மற்றும் மறைமுக பேச்சுவார்த்தைகளை முன்னிலைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் விவகாரத்தில் வரும் நாட்களில் ட்ரம்பின் பேச்சில் சுதி குறையும் பட்சத்தில், பார்வையாளர்களின் கணிப்பே சரியென தெரிந்துகொள்ளலாம்.



