
கோலாலம்பூர், மார்ச்-4 – காவடியாட்டத்தை கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டு இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ள நாட்டின் முன்னணி மலாய் வானொலி நிலையமான ஏராவின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இது சாதாரண விஷயமல்ல; பல்லின மலேசிய மக்களின் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செகுத்து பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் சாடினார்.
இந்நாட்டில் மதங்களை குறிப்பாக இஸ்லாம் அல்லாதோரை இழிவுப் படுத்தும் செயல்கள் நடப்பது இது முதன் முறையல்ல;
தக்க நடவடிக்கை இல்லாத காரணத்தால், இச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இந்த ஏரா வானொலி விஷயத்திலும் இது நடக்கக் கூடாது;
மாறாக, 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட நிந்தனைக்குரிய விஷயமாகக் கருதி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஞ்சீவன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அமுலாக்கங்கள் கடுமையாகாத வரை, இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதும், பின்னர் மன்னிப்புக் கேட்டு விட்டு, மறந்து விடுவதும் தொடர்ந்து நடக்கும்.
எனவே, மற்றவர்களுக்கு தக்க பாடமாக அமைய வேண்டுமென்றால், இந்துக்களைக் காயப்படுத்திய ஏரா வானொலி மீது சட்ட நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென சஞ்சீவன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.