
கோலாலம்பூர், மார்ச்-8 – டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீதான ஊழல் விசாரணையின் பின்னணியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருப்பதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட டிக் டோக் வீடியோவை, போலீஸ் விசாரித்து வருகிறது.
தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் அதனை உறுதிப்படுத்தினார்.
அவ்வீடியோ குறித்து அரசு சாரா இயக்கமொன்றைச் சேர்ந்தவர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்ததை அடுத்து விசாரணைத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து அந்த டிக் டோக் கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண, மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையத்தின் உதவி நாடப்பட்டுள்ளது.
அன்வாரோடு, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயிலுக்கும் அதில் பங்கிருப்பதாக அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
9-ஆவது பிரதமராக இருந்த போது Keluarga Malaysia கொள்கை விளம்பரத்துக்கு 700 மில்லியன் ரிங்கிட் செலவானது தொடர்பான விசாரணையில், இஸ்மாயில் சாப்ரி சந்தேக நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்குச் சொந்தமான இடங்களிலிருந்து 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணமும், 16 கிலோ கிராம் தங்கக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டன.
பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சாப்ரி, அடுத்த வாரம் இரண்டாவது தடவையாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.