Latestமலேசியா

மலேசியாவின் தவில்-நாதஸ்வரம் இரட்டையர்கள் படைப்போடு மெல்பர்னில் களைக் கட்டப்போகும் ஆட்டம் பாட்டம் கோலாட்டம் நிகழ்ச்சி

மெல்பர்ன், மார்ச்-30 – ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி APK2.0 எனப்படும் ஆட்டம்-பாட்டம்-கோலாட்டம் எனும் கலாச்சார – உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கு வளமான கலாச்சாரம், மதிப்புமிக்க பண்பாட்டுக் கூறுகள் மற்றும் பாரம்பரியத்தை விட்டுச் செல்லும் நோக்கில்,
மெல்பர்ன் (Melbourne) இந்தியக் கலாச்சார சங்கம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

2023-ல் முதன் முறையாக சிறிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு கிடைத்த நல்ல வரவேற்பின் அடிப்படையில் டிக்கெட் விற்பனை மூலம் சற்று பெரிய அளவில் 500 வருகையாளர்களைக் குறிவைத்து இம்முறை நடத்தப்படுகிறது.

மலேசிய-சிங்கப்பூர் உணவுத் திருவிழாவும் வருகையாளர்களுக்குக் காத்திருக்கிறது.

மெல்பர்னில் வாழும் மலேசிய-சிங்கப்பூர் இந்திய வம்சாவளியினருக்கான ஒரு ஒன்றுகூடலாகவும் இந்நிகழ்ச்சி அமையுமென, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ரேகா வணக்கம் மலேசியாவிடம் கூறினர்.

கோலாட்டம் தவிர, பறையிசை மலாக்கா பெரானாக்கான் சீனர்களின் படைப்பு என ஏராளமான மற்ற அம்சங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையம் வாயிலாகவே டிக்கெட்டுகள் விற்கப்படும் நிலையில் இதுவரை 50 விழுக்காட்டு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

வயது வித்தியாசமின்றி மெல்பர்ன் சுற்று வட்டார தமிழர்கள் திரளாக இந்நிகழ்ச்சியில் வந்து பங்கேற்குமாறு ரேகா கேட்டுக் கொண்டார்.

இதனிடையே இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மலேசியாவின் பிரபல நாதஸ்வர-தவில் இரட்டையர்களான கார்த்திகேசன் மற்றும் கணேசனுக்கும் மெல்பர்ன் சங்கம் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது மலேசிய இசைக் கலைஞர்கள் குறிப்பாக பாரம்பரிய இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்துள்ள பெரிய அங்கீகாரமாகும்.

இரட்டையர்களாக இருப்பது நாதஸ்வரம் வாசிப்பதில் தங்களுக்குக் கூடுதல் நன்மையே என்றும் கணேசன் கூறினார்.

இந்த மெல்பர்ன் வாய்ப்பு குறித்து பெருமிதம் தெரிவித்த கணேசன், பாரம்பரிய இசையுடன், சினிமா பாடல்கள், குத்துப் பாடல்கள் என இரசிகர்களை மகிழ்விக்க பெரும் ஆர்வத்தோடு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கு முன் வெளிநாடுகளில் வாசித்திருந்தாலும், இந்த மெல்பர்ன் கலைச்சார நிகழ்ச்சி வித்தியாசப்படுகிறது என்றார் அவர்.

இந்தியர்கள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் நமது கலாச்சாரம் தொடர்ந்து பேணி காக்கப்படுகிறது. எதிர்கால சந்ததியினருக்கு நம் கலாச்சாரம் கொண்டு சேர்க்கப்படுவதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒரு நல்ல சான்றாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!